மத்திய அரசை சந்தோஷப்படுத்தவே சிதம்பரம் குறித்து அதிமுக விமர்சிக்கிறது: சு.திருநாவுக்கரசர்

ப.சிதம்பரம் குறித்து அதிமுக அமைச்சர்கள் விமர்சிப்பது மத்திய அரசை சந்தோஷப்படுத்த தான் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக மத்திய அரசு, இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. பாஜக மாநில தலைவர் பதவிக்கு ரஜினிகாந்தை அமர வைக்க சிலர் முயற்சிப்பதாக செய்திகளில் படித்தேன். அதை ரஜினிகாந்த் ஒருபோதும் ஏற்கமாட்டார். பாஜகவின் தேசிய தலைவர் பதவியை கொடுத்தால் கூட, ரஜினிகாந்த் அதை ஏற்றுக்கொள்வது சந்தேகமே. இன்றைக்கு மத்திய அரசின் மீதான அதிருப்தி அந்த அளவுக்கு அனைவரிடமும் இருக்கிறது.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார். முன்னாள் கர்நாடக அமைச்சர் டி.கே சிவகுமார் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார். இவை அனைத்துமே அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் தான். ப.சிதம்பரம் மீது அதிமுக அமைச்சர்கள் விமர்சனத்தை முன்வைப்பது எல்லாம் மத்திய அரசை சந்தோஷப்படுத்த தான். இவர்கள் மத்திய அரசை குஷிப்படுத்தினால் மட்டும் தான், இங்கு இவர்களின் ஆட்சி தொடரும்” என்று தெரிவித்தார்.