சென்னை:
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று முக்கிய முடிவு எடுக்கப்டுமென தகவல் வெளியாகியுள்ளது.

வேட்பாளர் தேர்வு, தொகுதிபங்கீடு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக ஆலோசனை மேற்கொள்ள இருப்பதால் மாவட்டச் செயலாளர்கள் யாரும் சென்னையை விட்டு வெளியேற வேண்டாம் என்று அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்கவுள்ளது. ஆனால், அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. அதேபோல், பங்கீடு பெற்ற பாமக, பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அதேபோல், பேச்சுவார்த்தை நிறைவு செய்யப்பட்டு தமாகா மற்றும் பல்வேறு சிறிய கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்குவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக நேற்று அறிவித்தது.

இதற்கிடையே, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு உட்பட்ட தொகுதிகளுக்கு தலா 3 பெயரை வேட்பாளர்களாக பரிந்துரை செய்துள்ளனர்.

இதையடுத்து, யாரும் சென்னையை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் வெளியூரில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் உடனே சென்னைக்கு வரவேண்டும் என்றும் அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மற்றும் ஆட்சிமன்ற குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மார்ச் 10-ம் தேதி காலை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கையைத் தவிர, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.