சென்னை: அதிமுக – தேமுதிக தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நாளை (9ந்தேதி) தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு தேமுதிக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேமுதிக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக உள்ளது. முதல்கட்ட பேச்சு வார்த்தையில் 40 சீட்கள் வரை தேமுதிக கேட்ட நிலையில் தற்போது பாமக, பாஜக கட்சிகளுக்கு இணையாக தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. பின்னர்ஓபிஎஸ் உடன் எல்.கே.சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்க அதிமுக ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக இன்று இரு கட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்,   நாளை மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிக அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நாளை (மார்ச் 09) காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.