சென்னை:

திமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுக தலைமைமீது அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், வரும் 23ந்தேதி திமுகவில் இணைய உள்ளதாக அறிவித்து உள்ளார். இதற்காக மதுரை ஒத்தகடை பகுதியில் பிரமாண்ட விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவரான ராஜகண்ணப்பன் திமுகவில் இணைவது அதிமுகவுக்கு பேரிழப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ராஜகண்ணப்பன். இவர்மீது, 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும், ராஜகண்ணப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர்மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது.

அமைச்சராக இருந்தபோது ராஜகண்ணப்பன்  ரூ.11 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 252 மதிப்புள்ள கட்டிடங்கள், நிலங்கள், வாகனங்கள்  போன்ற ஏராளமான சொத்துக்களை தன் பெயரிலும் தன் மனைவி, தாயார் மற்றும் உறவினர் பெயரிலும் முறைகேடாக வாங்கி குவித்து உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதன் காரணமாக, ராஜகண்ணப்பனை அதிமுகவில் இருந்து ஜெயலலிதா  ஒதுக்கி வைத்தார்.  ஜெ.உயிருடன் இருக்கும் வரை அதிமுகவில் சேர்க்காமல் கண்ணப்பனை ஒதுக்கப்பட்ட நிலையில், அவரது மறைவுக்கு பிறகு, ஓபிஎஸ் அணியுடன் இணைந்து தலைகாட்டத் தொடங்கினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும் போட்டியிட சீட் கேட்ட நிலையில், அவருக்கு சீட் வழக்க அதிமுக தலைமை மறுத்துவிட்டதால், பாஜகவுக்கு போகப்போவதகாகூறியவர், அடுத்த ஒரே வாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணி சார்பில், ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்ட நிலையில், அவருக்கு  ஆதரவாக சிவகங்கை தொகுதியில் பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவித்தார். 

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த யாதவ மக்களின் வாக்குவங்கிகளை தன்வசம் வைத்துள்ள ராஜ கண்ணப்பன், அதன் மூலம் திமுகவில் சேர முயற்சி மேற்கொண்டு வந்தார். தற்போது திமுக தலைமை கண்ணசைத்த நிலையில் வரும் 23ந்தேதி தனது சமுதாய மக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக அறிவித்து உள்ளார்.

இந்த இணைப்பு விழாவுக்காக மதுரை ஒத்தக்கடை அருகே யானைமலை பகுதியில் பிரமாண்ட விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.