திமுகவில் ஐக்கியமாகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்!

சென்னை:

திமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுக தலைமைமீது அதிருப்தியில் உள்ள நிலையில், விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைய இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.

ஜெயலலிதா ஆட்சியின்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ராஜகண்ணப்பன். அவர்மீது  வருமானத்துக்கு அதிகமாக  சொத்து சேர்த்தாக திமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று, 4வது முறையாக திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக பதவி ஏற்றதும், ராஜகண்ணப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

வழக்கில், ராஜகண்ணப்பன் ரூ.11 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 252 மதிப்புள்ள கட்டிடங்கள், நிலங்கள், வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான சொத்துக்களை தன் பெயரிலும் தன் மனைவி, தாயார் மற்றும் உறவினர் பெயரிலும் வாங்கியதாக  குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதையடுத்து, அதிமுகவில் இருந்து ஜெயலலிதா ராஜகண்ணப்பனை ஒதுக்கி வைத்தார். அவரது மறைவுக்கு பிறகு, ஓபிஎஸ் அணியில் கடந்த 2017ம் ஆண்டு இணைந்தார். ஆனால், அவருக்கு முக்கியத்துவம் கிடைக்காத நிலையில், லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால், அவருக்கு இடம்கொடுக்க அதிமுக தலைமை மறுத்துவிட்ட நிலையில்,  பாஜகவுக்கு ஆதரவாக செயல்படப் போவதாக கூறினார்.

கடந்த மார்ச் 12ந்தேதி செய்தியாளர்களை சந்தித்த ராஜகண்ணப்பன், மோடி மீண்டும் தலைமைக்கு வந்தால் நாடு முன்னேறும்,  நாட்டு நலன் கருதி நல்ல பிரதமரை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளேன் என்று கூறினார்.

இது கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே மார்ச் மாதம் 18ந்தேதி அன்று, அதாவது 6 நாட்களுக்கு பிறகு, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, தான் திமுகவுக்கு ஆதரவாக செயல்படப் போவதாகவும்,  ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக சிவகங்கை தொகுதியில் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

தேர்தலுக்கு பிறகு அமைதியாக இருந்து வந்த ராஜகண்ணப்பன் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையப் போவதாகவும், வேலூர் தேர்தல் முடிந்த பிறகு திமுகவில் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.