சென்னை: அதிமுக தலைமை அறிவித்துள்ளபடி, நாளை (ஜனவரி 9ந்தேதி)  சென்னை வானகரத்தில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு விரிவாக செய்யப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணைய விதிகன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வருடத்திற்கு ஒருமுறை செயற்குழு, பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு (2020) கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை. இதையடுத்து, கடந்தாண்டு (2020) டிசம்பர் 20-ம் தேதி இந்த  அதிமுக தலைமை அலுவலகத்தி நடைபெற்ற ஆலோசனையின்போது, ஜனவரி  9-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

அதன்படி,  நாளை  வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமன மண்டபத்தில், தனிநபர் இடைவெளியுடன் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது. இதில் பல  முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் கலந்துகொள்ள செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்,எம்.பி.க்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கலந்துகொள்பவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழுடன் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்த பொதுக்குழுவில் சுமார் 3 ஆயிரம் முதல் 3500 பேர் வரை கலந்துகொள்வார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் அமர்வதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

பொதுக்குழுவில், அதிமுகவில் அறிவிக்கப்பட்டுள்ள 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கான அதிகாரம், முதல்வராக இபிஎஸ் அறிவிக்கப்பட்டது தொடர்பாக மற்றும் ஓபிஎஸ்ஸுக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிப்பது தொடர்பாக கட்சி விதிகளில் திருத்தம் ஆகியவை  உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நடைபெற உள்ள சட்டமன்ற  தேர்தலில் கூட்டணியை இறுதி செய்யவும், அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும்  தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நாளை மாலை 5 மணி அளவில் இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் அதிமுக தலைமையகத்தில் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.