சென்னை: அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி இன்று காலை 11 மணிக்கு மேல் தொடங்கியது. இந்த பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 1 நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது.

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அ  சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இன்று காலை 11 மணிக்கு, அதிமுக அவைத்தலைவர்  மதுசூதனன் தலைமையில் இபிஎஸ்-ஓபிஎஸ் முன்னிலையில்  தொடங்கியது.

இந்த கூட்டத்தில் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட  300-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதனால், வானகரம் பகுதியே தோரணங்கள், பேனர்களால்  விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி,

  1. நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு
  2. இலங்கையில் மகாண சபைகள் முறை ரத்து செய்யப்படுவதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
  3. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் 
  4. நாடு தழுவிய அளவில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை முன்னேற்றிய முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு பாராட்டு
  5. நகர்புற வீட்டு வசதித் திட்டத்தில் தமிழகத்தையும் சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
  6. உலக முதலீட்டாளர் மாநாடு நடத்திய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்
  7. தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி
  8. ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைத்து வரும் தமிழக அரசை பாராட்டி தீர்மானம்
  9. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத முன்னுரிமை எனும் நெறிமுறையை முறைப்படுத்திய தமிழக அரசுக்கு அதிமுக பொதுக்குழு பாராட்டு
  10. தனியார் மருத்துவக்கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்று இருப்பதற்கு பாராட்டு
  11. தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் அமைத்துள்ள தமிழக அரசுக்கு அதிமுக பொதுக்குழு பாராட்டு
  12. பொங்கல் பரிசுத் தொகையாக 2500 ரூபாய் வழங்கும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்
  13. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு அதிமுக பொதுக்குழு பாராட்டு
  14. அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளதை பொதுக்குழு ஏற்கிறது
  15. கூட்டணி, தேர்தல் வியூகம், தொகுதிப் பங்கீடு குறித்த முடிவெடுக்க ஓபிஎஸ் – இபிஎஸ்சுக்கு முழு அதிகாரம்
  16. தமிழ்நாட்டில் ஒரே குடும்பத்தின் ஏக போக, வாரிசு அரசியலை வீழ்த்துவது உள்பட 16  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

 

கழக செயற்குழு – பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விவரம்.