அதிமுக செயற்குழு கூட்டம்: நீட் ரத்து, இருமொழிக் கொள்கை உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

 
சென்னை: பெரும் பரபரப்புக்கு இடையில், அதிமுக செயற்குழு கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  குறிப்பாக நீட் தேர்வு ரத்து, இரு மொழி கொள்கை தொடர்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர்.  அதிமுகவில் முதல்வேடபாளர் சர்ச்சையை தொடர்ந்து வரும் நிலையில்,  இன்று  அதிமுக செயற்குழு  கூட்டம் சென்னையில்  தொடங்கியுள்ளது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு  கூட்டம்  தொடங்கியுள்ளது.

முன்னதாக ராயப்பேட்டை பகுதியில், முதல்வர் மற்றும் துணைமுதல்வர் வரும் பகுதியில்,  ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே ஆதரவு பதாகைகளை ஏந்தி நிற்கின்றனர். ஓபிஎஸ் படத்தை முகமூடியாக அணிந்தபடி அவரது ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். ஈபிஎஸ்தான் மீண்டும் முதல்வர் என்கிற பதாகையை ஏந்தி  அவரது ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர். துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு ஆளுயர மாலை அணிவித்து அவரது ஆதரவாளர்கள் மரியாதை செய்தனர்.

காலையில் இருந்தே அந்த பகுதியில் கரகாட்டம், புலியாட்டம், மேள தாளங்கள் முழங்க களை கட்டியுள்ளது. இந்த கொண்டாட்டங்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது நிகழ்ந்தது போலவே இருப்பதாக தொண்டர்கள் தெரிவித்தனர். செயற்குழு கூட்டத்துக்கு ஓ. பன்னீர் செல்வம் வருகை தந்தபோதும், எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்த போது மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.

அதுபோல, ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் தனித்தனியாக சந்தித்து பேசினர்.  செயற்குழு கூட்டம் துவங்குவதற்கு முன்பாகவே தற்பொழுது சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் ஓபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். அவர் மட்டுமல்லாமல் முதல்வர் மற்றும் துணை முதல்வரின் ஆதரவாளர்கள் அவர்களை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் உள்பட யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை.  செல்போன்களை பயன்படுத்த முடியாத வகையில் செயற்குழு கூட்டத்தில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.