இன்று அதிமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்படப்போவது யார்?

சென்னை: அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள முதல்வர் வேட்பாளர் சலசலப்புக்கு இடையே அதிமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னையில்  உள்ள அதிமுக தலைமை அலுவலகதில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தற்போது தயாராகி வருகின்றது. இந்நிலையில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. இப்போதே தேர்தல் பணியை தொடங்கி உள்ளது. இதில் முதல் கட்டமாக கட்சியின் செயற்குழுவை இன்று (திங்கட்கிழமை) அக்கட்சி யின் தலைமை அலுவலகத்தில் கூட உள்ளது. காலை 9.45 மணிக்கு செயற்குழு நடக்கிறது. தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என உள்ளடக்கிய செயற்குழுவில் சுமார் 250 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் முறைப்படி அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.

இன்றைய செயற்குழு அ.தி.மு.க. அவைத்தலைவர்  மதுசூதனன் தலைமையில் நடைபெற உள்ளது. . கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடிய உயர்மட்ட கூட்டத்தில் சட்டசபை தேர்தல் குறித்தும் முதலமைச்சர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு அமைப்பது ஆகியவைத் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது. ஆனால், அதில் எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் முடிந்தது.

இந்த நிலையில், இன்று  அதிமுக செயற்குழு கூடுகிறது. இதில்,  சசிகலா வருகை மற்றும்  முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் பொதுச் செயலாளர் குறித்த விவகாரமும் பேசப்படும் என தெரிகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் உடைந்த அதிமுக மீண்டும் ஒட்டப்பட்டது. இதையடுத்து, கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவில், பொதுச்செயலாளர் என்ற பதவியே முற்றிலுமாக அகற்றப்பட்டது.  தற்போது, ஜெயலலிதாவுக்கு பின்னர் நீக்கப்பட்ட பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் உருவாகி அந்த பதவி ஓ பன்னீர் செல்வத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கட்டும் என ஒரு சாரார் கருதுகிறார்கள். ஆனால் கட்சியும் ஆட்சியும் ஓபிஎஸ் தரப்பிடம் இருக்க வேண்டும் என ஒரு சாராரும், ஈபிஎஸ் தரப்பிடம் இருக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்களும் கருதுகிறார்கள். அதுபோல, சசிலாவை வருகையை ஒரு தரப்பினர் வரவேற்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் இன்று அதிமுக செயற்குழு கூடுகிறது. காரசாரமான விவாதங்கள் நடைபெறும் என தெரிகிறது.