வியப்பு: அதிமுக செயற்குழு கூட்டத்தில் வாஜ்பாய், கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்!

சென்னை:

திமுக செயற்குழு கூட்டத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும்  திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக  தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக செயற்குழு கூட்டம்  20ம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் 23ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில்  செயற்குழு கூட்டம்  நடைபெற்று வருகிறது.

கூட்டத்திற்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வகித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட கட்சி நிர்வாகிகள்  கலந்துகொண்டுள்ளனர்.

இந்த  செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில், குறிப்பாக மறைந்ததிமுக தலைவர் கருணாநிதிக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது அனைத்து தரப்பினரிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருணாநிதி தொடர்பான தீர்மானத்தில்,  இந்திய அரசியல் வானில் இணையற்ற நட்சத்திரமாகவும், பாராளுமன்ற பணிகளில் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாகவும், சொற்பொழிவாளராகவும், உலகம் மதிக்கும் ஒப்பற்ற தலைவராகவும் திகழ்ந்த, பாரத முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கும்,

முதுபெரும் அரசியல் தலைவரும், சிறந்த தமிழறிஞரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கும்,

ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவரும், இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தலைவராக பதவி வகித்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை காக்கவரும், அரசியல் அனுபவம் மிக்கவருமான சோம்நாத் சாட்டர்ஜி அவர்களுக்கும்,

கேரளா மற்றும் கர்நாடகாவிலும் ஏற்பட்ட கடும் மழை வெள்ள பாதிப்பால் உயிரிழந்த, பலநூறு சகோதர சகோதரிகளுக்கும்,

திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் உள்ளிட்ட மறைந்த கழக உடன்பிறப்புகளும்  இந்த செயற்குழு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு மொத்தம் 9 தீர்மானங்கள் அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதியை இறக்கும் வரை  வைர எதிரியாக நினைத்து அரசியல் செய்து வந்த நிலையில், அவரது மறைவுக்கு பிறகு அதிமுக நிர்வாகிகளின் போக்கில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. ஏற்கனவே கருணாநிதி உடல்நிலை குறித்து, அவரது வீடு மற்றும் மருத்துவமனையில் முதல்வர், துணைமுதல்வர், அதிமுக அமைச்சர்கள்  நலம் விசாரித்த நிலையில் தற்போது இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது… ஆகா… இது அதிமுக கட்சிதானா என்று அரசியல் கட்சிகளிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.