அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் இல்லங்களில் விளக்கு ஏற்றி வைத்து ஜெயலலிதாவை வணங்குங்கள்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் இல்லங்களில் விளக்கு ஏற்றி வைத்து ஜெயலலிதாவை வணங்குங்கள் என தமிழக முதல்வரும், அதிமுக துணைஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் 4 ஆம் நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் முதல்வர், துணைமுதல்வர் உள்பட அமைச்சர்கள், அதிமுக முன்னணியினர்  மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து உறுதி மொழி எடுக்கப்பட்டது. உறுதிமொழியை ஓபிஎஸ் வாசித்தார். அங்கு கூடியிருந்தவர்கள் அதை திருப்பி கூறி உறுதிமொழி ஏற்றனர்.  அதில், இயற்கை பேரிடர் நேரங்களில் சுற்றிச் சுழன்று அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர் ஜெயலலிதா என பன்னீர்செல்வம் தமது உறுதி மொழியில் குறிப்பிட்டார். அவர் காட்டிய வழியில் பல்வேறு இயற்கை பேரிடர் நேரங்களில் மக்களுக்காக தமிழக அரசு பணியாற்றுவதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளில், அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் தமது இல்லங்களில் விளக்கு ஏற்றி வைத்து அவரது திருவுருவப் படத்தின் முன் அன்போடு வணங்க வேண்டும் என   கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜெ.நினைவுதினத்தையொட்டி எடப்பாடி வெளியிட்டுள்ள டிவிட்டில், அம்மா நினைவுதினம். தமிழ்நாட்டு மக்களின் உயர்வும், மகிழ்ச்சியுமே தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு “மக்களால் நான்; மக்களுக்காகவே நான்” என தன்வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்த மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் எனது அஞ்சலியை உரித்தாக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.