இன்று கூடுகிறது அ.தி.மு.க. பொதுக்குழு!

சென்னை:

மிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கூடுகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் இன்று காலை 10.30 மணிக்கு கூட்டம்  தொடங்குகிறது.

இந்த கூட்டத்தில்,  தமிழகத்தில் விரைவில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கட்சி நிர்வாகிகளை தேர்தலுக்கு தயாராகும்படி பொதுக்குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் கட்சியில் மீண்டும் இணைந்தவர்களுக்கு பதவிகள் வழங்குவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் கிடைத்த  இடைத் தேர்தல் வெற்றி, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் போன்றவற்றுக்கு பாராட்டுத் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றவும் வாய்ப்புகள் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய பொதுக்குழுவில், பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் வரையிலும், செயற்குழு உறுப்பினர்கள் ஆயிரம் பேர் வரையிலும் மற்றம் சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 5ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி நிர்வாகிகள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ்களுடன் வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.