சென்னை:

அதிமுக எம்.எல்.ஏக்களுடன் சசிகலா இன்று ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வெற்றிக் கண்டுள்ள நிலையில் அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் இன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

அதனால் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக எம்.பிக்கள் கூட்டமும் இன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இதில் முதல்வர் பன்னீர்செல்வமும் பங்கேற்றார்.

முதலில் எம்.எல்.ஏக்களுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டம முடிந்தவுடன் எம்.பிக்களுடனுன் ஆலோசனை நடைபெற உள்ளது.

முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வந்தது. இந்த முடிவை தற்காலிகமாக தள்ளி போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் திடீரென எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டம் நடப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.