அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: திருத்தப்பட்ட விதிகளை ரத்து சசிகலா தரப்பு மனு

டில்லி:

திமுக எம்.பி. கே.சி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்த மனுவுக்கு அதிமுக சார்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், சசிகலா தரப்பில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் மூலம் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், திருத்தப்பட்ட விதிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும்  கோரப்பட்டு உள்ளது.

ஜெ. மறைவை தொடர்ந்து அதிமுகவை கைப்பற்ற சசிகலா முயற்சி மேற்கொண்டதால், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் தனி அணியாக நின்றார். பின்னர், சசிகலா ஜெயிலுக்கு சென்றதை தொடர்ந்து, பிரிநத அதிமுக அணிகள் ஒன்றிணைந்தன, தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவை கூட்டி அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

இதை எதிர்த்து, சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அதிமுக எம்.பி.யான கே.சி.பழனிச்சாமி மனு தாக்கல் செய்தார். அதில், அதிமுக சட்ட விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக்கோரியுள்ளார்.

இந்த மனுமீதான விசாரணையை தொடர்ந்து, அதிமுக சார்பில், தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தேர்தல் ஆணையத்தில்  நேற்று நேரில் சென்று மனு அளித்தார். அதில்,  அதிமுக உறுப்பினராகவே இல்லாத பழனிசாமியின் மனுவை நிராகரிக்க வேண்டும் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சசிகலா தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,   அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் மூலம் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும்,  அதிமுக கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்று கோரப்பட்டுள்ளது.

இது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.