சென்னை: அதிமுக ஆட்சியில் மின்சாரம் கொள்முதலில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்று அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ள அறப்போர் இயக்கம் தற்போது, மின்சார கொள்முதலில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அறப்போர் இயக்க  நிர்வாகிகள், மின்சார கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அதற்கான ஆதாரங்களை வெளியிட்டனர். அதன்படி, ஒரு யூனிட்டுக்கான மின்சாரத்தை ரூ.2 முதல் ரூ.2.50 வரை கூடுதலாக விலை கொடுத்து தமிழக அரசு வாங்கயதாகவும், அதன்படி ஒரு நாளைக்கு 6.9 கோடி யூனிட் மின்சாரம் வாங்கப்படுகிறது. சுமார் 10 ஆண்டு காலம் இவ்வாறு மின்சாரம் வாங்கப்பட்டு வருகிறது.  இதில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது.

2013 முதல் 2016 வரையிலான கால கட்டத்தில் ரூ.30,072 கோடியும்,  2016 – 2021 கால கட்டத்தில் ரூ.24,325 கோடியும்,  மொத்தத்தில் ரூ.54,397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. இந்த ஊழல் சம்பந்தமாக  நத்தம் விஸ்வநாதனும், அமைச்சர் தங்கமணியும் முறைகேடு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.