அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வரும் 6ந்தேதி சென்னைக்கு வர உத்தரவு!

சென்னை:  அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் 7ந்தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், வரும் 6-ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை வர, அதிமுக தலைமை உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, திமுக உள்பட அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வருவதால், தேர்தல் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பாக ஆலோசிக்க கடந்த வாரம் அதிமுக செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், அதில்,  15 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.ஆனால் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், எடப்பாடிக்கும், ஓபிஎஸ்-க்கும் இடையே காரசாரமான மோதல் நடைபெற்றதாக தகவல் வெளியானது.

செயற்குழு கூட்டம்  நிறைவடைந்த பின்  செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கூறுகையில் ,அக்டோபர் 7-ஆம் தேதி அதிமுகவின் முதமைச்சர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்  பழனிசாமி ஆகியோர் அறிவிபார்கள்  என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. எம்எல்ஏ-க்கள் அனைவரும், அக்டோபர் 6-ஆம் தேதி சென்னை தலைமைக்கழகம் வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.