டில்லி:

மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.கவும் இடம்பிடிக்க இருப்பதாக டில்லி அரசியல் வட்டாரத்தில் தகவல் உலவுகிறது.

தமிழக முதல்வராக இருந்த  ஜெயலலிதா மறைந்தபிறகு, ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அவரையும் அமைச்சரவையையும் மத்திய பாஜக அரசு ஆட்டிவைப்பதாக அப்போதிலிருந்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஓ.பி.எஸ்ஸுக்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமியையும் மத்திய பாஜக அரசுதான் இயக்குகிறது என்றும் பேச்சு எழுந்துள்ளது.

உதய் மின்திட்டம் உட்பட, மத்திய பாஜக அரசின் சில திட்டங்களை ஜெயலலிதா எதிர்த்துவந்தார்.  ஆனால்  அவரது மறைவுக்குப் பிறகு உதய் உட்பட சில திட்டங்களை.. அதாவது ஜெயலலிதா எதிர்த்தவகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது.

இன்னொரு உதாரணம் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம். இதை விவசாயிகளும் பொதுமக்கலும் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். பெரும் போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்த நிலையில் மக்கள் விரும்பாமல் திட்டம் நிறைவேற்றப்படாது என்று மத்திய அரசு அறிவித்தது.

அதே நேரம், இத்திட்டத்துக்கு சுற்றுப்புற சூழல் அனுமதியை தமிழக அரசிடம்தான் பெற வேண்டும். அதை நாங்கள் அளிக்க மாட்டோம் என்று தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழக அரசு சிறிதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆகவே தமிழக அரசை மத்திய பாஜக அரசுதான் இயக்கிவருகிறது என்று மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே அதிமுக என்ற பெயரை பயன்படுத்த தடை, இரட்டை இலை முடக்கம், ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து, தேர்தல் ஆணையத்துக்கு பணம் கொடுத்ததாக தினகரன் மீது வழக்கு, அமைச்சர் உள்ளிட்டோர் வீடுகிளில் வருமானவரி சோதனை போன்ற நடவடிக்கைகளும் மத்திய பாஜகவின் நடவடிக்கைகளே என்று மக்கள் நம்புகிறார்கள்.

இதுவும் அதிமுக அரசு மீதும், பாஜக மீதும் மக்களிடையே அதிருப்தி ஏற்பட காரணமாக இருக்கிறது.

இந்த அதிருப்தியைப் போக்க, அ.தி.மு.க. எம்.பிக்கள் இருவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. கேபினட் அமைச்சராக இல்லாமல் இணை, துணை அமைச்சராக இருவருக்கு வாய்ப்பு கிடைக்குமாம்.

இதன் மூலம், “அதிமுகவுக்கு உரிய அங்கீகாரத்தை மத்திய பாஜக அரசு அளித்துள்ளது. தமிழகம் சார்பாக மேலும் இரு அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று மக்களிடையே தங்களுக்கு சாதமான எண்ணம் ஏற்படும்” என்று பாஜக நினைக்கிறது.

தற்போது அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைய இருக்கின்றன. முறையாக இணைந்து, அக்கட்சியில் நிலவும் குழப்பங்கள் தீர்ந்த பிறகு, இரு அதிமுக எம்.பிகளுக்கு பதவி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.