அதிமுக பாஜக கூட்டணி இல்லை: அதிமுக எம்.பி. தம்பிதுரை

டில்லி:

லைநகர் டில்லியில் இன்று தேர்தல் ஆணையத்தால் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில், துணைசபாநாயகர் தம்பித்துரை பங்கேற்றார். அதைத்தொர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பித்துரை, அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இல்லை என்று கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கட்சிகளின் ஆலோசனை பெறுவதற்காக டில்லியில் இன்று தேர்தல் ஆணையத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த  அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், தேர்தல் ஆணையர்கள் சுனில் அரோரா, அசோக் லாவாசா ஆகியோரும், பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 7 தேசியக் கட்சிகள், அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட 51 மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதில், அதிமுக சார்பில் தம்பிதுரையும், திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவனும் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தம்பித்துரை, வாக்காளர் பட்டியலில் யாரும் விடுபட கூடாது என்றும்,  பல நேரங்களில் இறந்தவர்கள் பெயர்கள் சேர்க்கப்படுவதும், பலரின் பெயரும் விடுபட்டு வருகிறது. இதுபோன்று தவறு ஏற்படக்கூடாது என்றும்,  வாக்காளர் பட்டியலில் ஒருவர் கூட விடுபடாமல் சேர்க்கப்பட வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தம்பிதுரை தெரிவித்தார்.

மேலும், தேர்தலில் பெண்கள் பங்கேற்கும் வகையில், “பெண்களுக்கு 33 % இடஒதுக்கீடு தர வேண்டும்” நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க அதிமுக போராடி வருகிறது, அதுவே ஜெயலலிதா வின் நிலைப்பாடு என்றும் கூறினார்.

தேர்தல் செலவு குறித்து ஆலோசித்தபோது, தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும் என்றும், அரசு ஊடகங்கள் மூலம் விளம்பரங்கள் செய்யலாம் என்றும் தெரிவித்தாக கூறினார்.

மேலும், தேர்தலில், “வாக்குசீட்டோ, மின்னணு எந்திரமோ எது நடைமுறைப்படுத்திலும் அதில், தவறு நடக்க கூடாது என்றும்,  சரியான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் கொள்கை.  தேர்தல் ஆணையம் மீதும், ஜனநாயகம் மீதும்  எங்களுக்கு நம்பிக்கை உள்ளது, எந்த முறையில் தேர்தல் நடத்தினாலும் வரவேற்போம் என்று கூறினார்.

அனைத்துக் கட்சியினரும் வாக்குச் சீட்டு முறையே வேண்டும் என கூறினால், தாங்களும் அதற்கு ஆதரவு தெரிவிப்போம் என கூறிய அவர், தேர்தல் எப்படி நடந்தாலும், அதிமுகவே வெற்றிபெறும் என்றும் தெரிவித்தார்.

அதேபோல், திமுக பிரதிநிதியாக பங்கேற்ற டி.கே.எஸ்.இளங்கோவன், மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில், முன்கூட்டியே தேர்தல் முடிவுகள் இறுதி செய்யப்படுவதாகவும், வெற்றியை புரோக்கர்களே தீர்மானிப்பதால், வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார்.

மேலும் அதிமுக அகில இந்திய கட்சி என்று கூறிய தம்பித்துரை, திமுக நினைவேந்தல் நிகழ்ச்சியில் அதிமுக வுக்கு அழைப்பு வரவில்லை என்று கூறினார். கலைஞர் இறந்தபோது நாங்கள் அனைவரும் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியதாகவும், அதிமுக செயற்குழுவில் கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதையும் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர் ஒருவர்  திமுகவுடன் பாஜக நெருங்கி வருவதாக தெரிகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த தம்பித்துரை,  பாஜக திமுகவுடன் நெருங்கினால் எங்களுக்கு கவலை இல்லை ,  அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இல்லை. ஏற்கனவே  5 ஆண்டுகாலம் பாஜக திமுக கூட்டணி ஆட்சியில் இருந்ததாகவும், சமயத்திற்கேற்றவாறு மதவாத கட்சி என்பார்கள் பின்னர் நெருங்குவார்கள். அது அரசியல் என்றும் கூறினார்.