அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு

சென்னை:

ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

தற்போதைய நவநாகரீக உலகிற்கு ஏற்ப சமூக வளைதளங்களை கையாள பல முக்கிய அரசியல் கட்சிகளில் தகவல் தொழில்நுட்ப பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அதிமுக.விலும் இந்த பிரிவு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சசிகலா முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு முதல் போர்க்கொடி தூக்கியுள்ளார். அவருக்கு கட்சியின் நிர்வாகிகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

நேற்று ஓ.பி.எஸ். நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இவர் உடன் இருந்தார். இவர் அகமதாபாத் ஐஐஎம் முன்னாள் மாணவர். கட்சியை சமூக வளைதளங்களில் பிரபலப்படுத்த ஜெயலலிதா இவரை தேர்வு செய்து நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பன்னீர்செல்வத்தை ஆதரித்து பல கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதேபோல் இந்த பிரிவின் இணைச் செயலாளர் ஹரி பிரபாகரனும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிமுக அதிகாரப்பூர்வ சமூக வளை தள பக்கத்தை கையாளும் உரிமை இவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.