சிவகங்கை:

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பேசிய அதிமுக அமைச்சர் பாஸ்கரன், விரைவில், பாஜக கூட்டணியில் இருந்து விலக அதிமுக தீர்மானித்து இருப்பதாகவும், அதற்கான நேரம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இது அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத சட்ட திட்டங்களையும்  சிரமேற்கொண்டு நிறைவேற்றி வருகிறது.  சமீபத்தில் மத்தியஅரசு கொண்டு வந்துள் சிஏஏ சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக பாராளுமன்றத்தில் ஆதரவு கொடுத்து சட்டத்தை நிறைவேற்ற உதவி செய்தது.

அதிமுகவின் பாஜக ஆதரவு போக்கு தமிழக மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், வாக்குவங்கியை பறிகொடுக்க நேரிடும் என்று அதிமுக யோசித்து வருகிறது. சிஏஏ, என்ஆர்சி சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி உள்பட அதிமுக அமைச்சர்கள் வாக்குறுதி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நடைபெற்ற எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழக  தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன்,  குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது,  தமிழக அமைச்சர்கள் அனைவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர், இதன் காரணமாக,  பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்து தனியாக செல்ல அதிமுக நேரம் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறினார்.

மேலும், தமிழக அமைச்சரவையிலே எல்லோரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் எனவும் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தன்னை சட்டையை பிடித்து கேட்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பாஸ்கரனின்  பேச்சு  பாஜக- அதிமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.