மதுரை: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தேர்வு செய்கிறார்களோ அவரே முதல்வர்  என்று கூறிய அமைச்சர்  செல்லூர் ராஜு திமுகவிலிருந்து யார் அதிமுகவுக்கு வந்தாலும் வரவேற்போம் என்று கூறினார்.

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி கண்மாய்ப் பகுதியில்  நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை  ஆய்வு செய்த அமைச்சர் செல்லூர் ராஜு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது,

கடந்தாண்டு மழையளவு சீராக இருந்ததால் மதுரை மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.  கண்மாய் நீர்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும்.

முல்லைப் பெரியாறு, வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.  இது  மதுரை, ராமநாதபுரம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. மேலும், ரூ.1428 கோடி ஒதுக்கி நீர் நிலைகள் மேம்படுத்தப்படுகிறது.

கண்மாய்கள், குளம், ஏரிகளில் நீர் நிரப்பப்பட்டு தண்ணீர் சேமிக்கப்பட்டு நீர் தேவையைப் பூர்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

மதுரை வைகையாற்றில் ரூ.17 கோடியில் கொடிமங்கலம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு விவசாயிகள் பாசன வசதி பெற நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர்,  திமுக ஒரு குடும்ப கட்சி. அங்கு வாரிசு அரசியல் நடைபெறுகிறது. அதனால், மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி தற்போது கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வளர்ந்து வருகிறார் என்று கூறியவர், திறமை இல்லாத மு.க.ஸ்டாலின் திமுகவுக்கு தலைவராக உள்ளார் என்று நக்கலடித்தார்.

திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,  கு.க.செல்வம் திமுகவிலிருந்து பாஜகவிற்கு சென்றது அவரது விருப்பம். எங்களது கருத்தை ஏற்று அதிமுகவிற்கு திமுகவினர் யார் வந்தாலும் வரவேற்போம். ஏன், பாஜகவின் நயினார் நாகேந்திரன் அதிமுகவிற்கு வந்தாலும்கூட வரவேற்போம் என்றார்.

அடுத்த அண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு,  சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக புயல் வேகத்தில் பணியாற்றி வருகிறது. அதிமுக எப்போதும் இபிஎஸ்,

சசிகலா பற்றி எங்களுக்கு கவலையில்லை.சசிகலா வெளியே வந்தாலும் அதிமுக மிகப்பெரிய வலுப்பெறும். அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நன்றாக செயல்பட்டு வருகிறது.சட்டமன்ற தேர்தலில் அதிமுக புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இரு பெரும் தலைவர்கள், இபிஎஸ்-ஒபிஎஸ் தலைமையில் கட்சி நடைபெறும். அதில் மாற்று கருத்தே இல்லை.

அதிமுகவில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு,  தேர்தலுக்குப் பின்னர் சட்டப்பேரவை சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை முதல்வர் என்கிறார்களோ அவரே தமிழக முதல்வர்” எனத் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.