சென்னை :

திமுகவில் வெடித்த உட்கட்சி பூசலை தொடர்ந்து இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள்,எம்பி.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இன்று காலை  காலை 10.30 மணிக்கு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தலைமையில் தொடங்கிய கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் மட்டுமே நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உட்கட்சி பிரச்சனை பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் பேசிய அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்,  தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது குறித்து அமைச்சர்களின் கருத்தை மட்டும் கேட்டால் போதாது கட்சித் தொண்டர்களின் கருத்தை கேட்ட வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதைத்தொடர்ந்து, கட்சி சம்பந்தமான தங்களது கருத்துகளை தலைமையிடம் நேரடியாக கூறுங்கள், ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் – 1

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், அதிமுக வேட்பாளர்களுக்கும், கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணியின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை இந்தக் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் – 2

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காகவும், சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் அரும்பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும்; தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும்; தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும் இந்தக் கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் – 3

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசத்தின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அதிமுகவுக்கு அளித்தமைக்கு இந்தக் கூட்டம் தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் – 4

தமிழ் நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சிறப்புடன் பணியாற்றி, மகத்தான வெற்றியைப் பெற்றிட இந்தக் கூட்டம் உறுதி ஏற்கிறது. உள்ளாட்சி மன்றத் தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்கி மக்கள் மனங்களை வென்றெடுக்க இந்தக் கூட்டம் சூளுரைக்கிறது.

தீர்மானம் – 5

தமிழ் நாட்டின் தன்னிகரில்லா மக்கள் இயக்கமான அதிமுக, ஏழை, எளியோருக்கும், தாய்க்குலத் திற்கும் தொண்டாற்றும் தூய அரசியல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும், மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு, தமிழக மக்கள் எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ்ந்திடும் வண்ணம் செயல்படவும் இந்தக் கூட்டம் உறுதி ஏற்கிறது என்று 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஏற்பாட்டில் ஆவின் மோர் சப்ளை செய்யப்பட்டது.