சேலத்தில் நடைபெறும் தனது இல்ல திருமண அழைப்பிதழில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படத்தை தவிற்த்துவிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை மட்டும் அச்சிட்டு வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பத்திரிக்கை அளித்து வருவது அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து இரண்டாக அதிமுக பிளவுப்பட்ட போது, அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றிருந்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் வாக்களித்தவர் வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ மனோன்மணி சிவக்குமார். அதிமுகவில் இருந்து தினகரன் குடும்பத்தினர் ஒதுக்கி வைக்கப்பட்ட பின்னர், கட்சி ஒருங்கிணைந்தது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் பொறுப்பேற்றனர். ஆனாலும் கட்சியில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆதரவு என இரு அணிகள் இருப்பதாக அவ்வப்போது பேசப்பட்டு வந்தது.

சமீபத்தில் அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு போட்ட உத்தரவு படி, தங்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் படத்துடன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் படமும் இடம்பெற்று வந்தது. ஆனால் தற்போது வீரபாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மனோன்மணி சிவக்குமார், தனது இல்லத்திருமண விழா அழைப்பிதழில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் படத்தை தவிர்த்துள்ளார்.

ஏற்கனவே இரு அணிகள் அதிமுகவில் இன்னமும் தொடர்வதாக பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையில், அதிமுகவில் இவ்விவகாரம் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

முன்னதாக மதுரை வடக்கு அதிமுக எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா, அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அடுத்த சர்ச்சையாக கட்சியில் இவ்விவகாரம் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.