அதிமுக எம்எல்ஏ பிரபு மனைவி சவுந்தர்யா நீதிமன்றத்தில் ஆஜர்! அவகாசம் வழங்கி தீர்ப்பு தள்ளி வைப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு, கடத்தல் மற்றும்  காதல் திருமணம் விவகாரத்தில், பெண்ணின் தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுமீதான விசாரணையில் மாணவி சவுந்தர்யா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதையடுத்து, பெற்றோரிடம் கலந்துபேசி தெரிவிக்க அவகாசம் வழங்கி தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட உள்ளது.

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பிரபு,  அந்த பகுதியைச் சேர்ந்த கோவில்குருக்களின்  மகள் சவுந்தர்யா என்பவரை  காதலித்து வந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் சம்மதிக்க மறுத்ததால், அந்த இளம்பெண்ணை கடத்திவந்து, தனது குடும்பத்தினர் முன்னலையில் திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரை காவல்துறை ஏற்க மறுத்த நிலையில், உயர்நீதிமன்றத்தில், மாணவியின் தந்தை சுவாமிநாதன், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து,   எம்எல்ஏ பிரபுவின் மனைவி சவுந்தர்யாவையும், அவரது தந்தை சுவாமிநாதனையும்    நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது. அதன்படி இன்று காலை சவுந்தர்யாவும், அவரது தந்தை சுவாமிநாதனும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள், சௌந்தர்யா தனது தந்தையுடன் பேசி இறுதி முடிவை தெரிவிக்கலாம் என கால அவகாசம் வழங்கியுள்ளனர். அதையடுத்து தீர்ப்பு வழங்கப்படும் என கூறி  தீர்ப்பை தள்ளி வைத்தனர்.