Random image

அதிமுக எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கலாம் என்பது பகல் கனவு: துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

வேலூர்:

திமுக எம்எல்ஏக்களை யாரும் விலைகொடுத்து வாங்க முடியாது, அவர்களை வாங்கி விடலாம் என்று சிலர் நினைப்பது பகல் கனவு  என்று துணைமுதல்வர் ஓபிஎஸ் கூறி உள்ளார்.

காஞ்சிபுரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கொம்பு அணை  உடைந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் தெரிவித்த ஓபிஎஸ்,  முக்கொம்பு அணை 176 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது என்று கூறினார்.  முக்கொம்பு  அணையையும், தமிழக அரசினையும் ஸ்டாலின் ஒப்பிடுவது தவறு. உடைந்த முக்கொம்பு அணை தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் விரைந்து சீர் செய்யப்பட்டது. அத்துடன் புதிய அணை கட்டுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கரிகாலன் கட்டிய கல்லணை ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து உறுதியாக உள்ளது போல் அ.தி.மு.க. அரசும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் என்று கூறினார்.

மேலும்,  கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரினை தேக்கி வைப்பதற்கான திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்தவர், டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு,  அதிமுக எம்எல்ஏக்களை எந்தக் கட்சியினாலும், எந்தக் காலத்திலும் விலை கொடுத்து வாங்க முடியாது. அவர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என நினைப்பது பகல் கனவாகவே முடியும். எம்.ஜி.ஆரால் அஸ்திவாரம் போடப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டப்பட்ட மாளிகை அ.தி.மு.க. எந்தக் காலத்திலும் எவராலும் தகர்க்க முடியாத மாளிகையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.