பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக எம்.பி.க்கள் அமளி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி:

ரஃபேல் போன்ற முக்கியமான விவகாரங்களில் மோடி அரசு பதில் அளிக்காத வகையில், பாஜகவுக்கு ஆதரவாகவே அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர் காங்கிஸ் குற்றம் சாட்டி உள்ளது.

இன்று 7வது நாளாக மாநிலங்களவை முடக்கப்பட்டு உள்ளது.

ரபேல் மற்றும் மேகதாது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 11ம் தேதி தொடங்கி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  நடைபெற்று வருகிறது. தொடர் ஆரம்ப நாள் முதலே ரஃபேர் விவகாரம், மேகதாது அணை விவகாரம் குறித்து அதிமுக மற்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால், அவைகள் விவாதமின்றி முடக்கப்பட்டும் வருகிறது. மாநிலங் களவையில் அலுவல்கள்  00 சதவிகிதம் முடங்கி உள்ளன.

இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல  பாராளுமன்றம் கூடியதும், ரஃபேல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்பிக்களும், மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்களும் முழக்கங்கள் எழுப்பினர். பிற கட்சி எம்பிக்களும் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் அமளி  காரணமாக  அவையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார். இதன் காரணமாக  மாநிலங்களவை இன்று  7-வது நாளாக முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரஃபேல் ஒப்பந்த விவகாரம் மற்றும்  சி.பி.ஐ, ஆர்.பி.ஐ போன்ற விவகாரங்களில் எதிர்க்கட்சிகளின்  கடுமையான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய  நிர்ப்பந்தத்தை தடுக்கவே, பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக அமளியில் ஈடுபட்டு வருகிறது என்றும், அவையை முடக்குகிறது என்றும் காங்கிரஸ் எம்.பி ஹரிபிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.