அமித்ஷா விருந்தில் பங்கேற்க ஈபிஎஸ், ஓபிஎஸ் நாளை டில்லி பயணம்!

டில்லி:

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வெளியாகி வரும் எக்சிட் போல் அனைத்திலும், பாஜக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று செய்திகள் வெளியான நிலையில், கூட்டணி கட்சியினருக்கு அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

தலைநகர் டில்லில் நடைபெற்றும் வெற்றிக்கொண்டாட்டத்தில், பாஜக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டணி கட்சியினர்  அனைவருக்கும் நாளை விருந்தளிக்கவும் பாஜக முடிவு செய்துள்ளது. நாளை இரவு 7 மணியளவில் டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் அமித்ஷா கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு  விருந்து அளிக்கிறார்.

இந்த விருந்தில் கலந்துகொள்ள தமிழகத்திலும், அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமித்ஷா ஏற்பாடு செய்துள்ள விருந்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மேலும், பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், ஜி.கே.வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, பெஸ்ட் ராமசாமி, நடிகர் சரத்குமார், டாக்டர் வே.தேவநாதன் யாதவ், ஜான் பாண்டியன், பூவை.ஜெகன் மூர்த்தி உள்ளிட்டவர்களுக்கு அமித்ஷா சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களும் விருந்தில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.