டில்லி,
ந்த மாதம் இறுதியில் நடைபெற இருக்கிற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் பதவிக்கு நான் போட்டியிடுவேன் என சசிகலாபுஷ்பா எம்.பி கூறியுள்ளார்.
அவரது பேச்சு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை அதிமுக கட்சி தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
அதிமுக சட்டவிதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக இருந்தால் மட்டுமே பொதுச்செயலாளராக போட்டியிட முடியும்.
ஆனால், அதிமுகவின் ஒரு பிரிவினர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை பொதுச்செயலாளராக முயற்சி செய்து வருகின்றனர்.
அதற்கு தகுந்தாற்போல் சட்டதிட்டங்கள் திருத்தப்படும் என அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் பொன்னையன் அறிவித்து இருந்தார்.
ஆனால், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுக்கக்கூடாது என சசிகலா எம்.பி. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதற்கிடையில் இந்த மாதம் 29ந்தேதி சென்னை மதுரவாயலில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூடுவதாக தகவல்கள் வருகிறது.
இதுகுறித்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி., கூறியதாவது,
தற்போது அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன்.  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது பற்றி நான் முடிவு செய்வேன் என்று கூறினார்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட எனக்கு உரிமை உள்ளது.
என்னை யாரும் அதிமுகவில் இருந்து இன்னும் நீக்கவில்லை. நான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டி ருந்தால், என் மீது விசாரணை நடத்தி கடிதம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தற்போது வரை மாநிலங்களவை ஆவணத்தில் நான் அதிமுக எம்.பி.யாகவே நீடிக்கிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா நடராஜன் வருவதை 75 சதவீத அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை.
மக்கள் முன் நாடகம் ஆட கட்சி தொண்டர்களை நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வற்புறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
அவரது இந்த பேட்டியால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக தொண்டர்கள் பல இடங்களில் ஜெயலலிதா தோழியான சசிகலா கட்சிக்குள் வருவதை எதிர்த்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.