தமிழக அரசையும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வையும் மத்திய பாஜக அரசு ஆட்டுவிக்கிறது என்ற கருத்து பரவலாக இருக்கிறது. பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர்களையும் அதிமுக பிரமுகர்கள் அடிக்கடி சந்தித்து வருகிறார்கள்.

மைத்ரேயன்

சமீபத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக அமைச்சர் சந்தித்தார். அதேபோல மைத்ரேயனும் மத்திய அமைச்சர்களை சந்தித்தார்.

இது குறித்து ஒரு தகவல் உலவுகிறது.

அதாவது, “தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கள் நடக்கும் பிரச்சினைகள் ஓய்ந்த பிறகு (டி.டி.வி.தினகரன் அணி முழுமையாக வலுவிழந்த பிறகு) பாராளுமன்ற மேலவை துணை சபாநாயகர் தம்பிதுரை, எம்.பி. மைத்ரேயன், அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும் தென்சென்னை எம்.பி.யுமான ஜெயவர்தன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று பாஜக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.  அதனால்தான் தனது பி.டபுள்யூ.டி. பொறுப்பை ஓ.பி.எஸ்ஸுக்கு அளிக்க ஜெயக்குமார் ஒப்புக்கொண்டார்.

ஆனால்  டி.டி.வி.தினகரன் அணி வலுப்பெற்றுக்கொண்டே போகிறது. அவர்களுக்கு எம்.எல்.ஏக்களின் ஆதரவு அதிகரித்தபடியே இருக்கிறது. அதனால் இவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி தர மத்திய பாஜக யோசிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாகவே தம்பிதுரை, மைத்ரேயன், ஜெயக்குமார் ஆகியோர் மத்திய அமைச்சர்களை தொடர்ந்து சந்தித்துவருகிறார்கள்” என்பதுதான் அந்த தகவல்.

ஜெயக்குமார்

ஆனால் இதை இந்த மூவரும் மறுத்து வருகிறார்கள். குறிப்பாக, “தமிழக அமைச்சரவை பற்றியும் அதிமுக உட்கட்சி விவகாரங்களை பற்றியும் , மத்திய அமைச்சர்களிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது?” என்று  மைத்ரேயன் கேள்வி எழுப்பி உள்ளார்.

“மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பில் எந்தவித உள்நோக்கமும் இல்லை” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதை  பா.ஜ.க. முக்கிய பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர்., தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார்.

ஜெயக்குமார் கூறிய வாசகத்தை பதிவிட்டு, “நம்பிட்டோம்” என்று பதிவிட்டதோடு, காதில் பூ வைத்திருக்கும் படத்தையும் பதிவிட்டுள்ளார் எஸ்.வி.சேகர்.

எஸ்.வி.சேகர் நடித்த பிரபலமான நாடகம், “காதுல பூ”  என்பது குறிப்பிடத்தக்கது.