மாமல்லபுரம் வரும் பிரதமர் மோடிக்கும், சீன அதிபருக்கும் உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக அதிமுக தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் வரும் 11ம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர். இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக மாமல்லபுரம் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. பின்னர், மகாபலிபுரத்தின் புராதன சின்னங்களையும் இரு தலைவர்களும் கண்டுகளிக்கவுள்ளனர். இந்திய, சீன தலைவர்களின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள புராதன மையங்களில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார் சாலைகள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகின்றன.

சுகாதாரம், குடிநீர், மின்விளக்கு வசதிகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மத்திய தொல்லியல் துறையும் பாரம்பரிய சின்ன மையங்களில் அழகிய புல்வெளிகளை அமைத்துள்ளன. பாதுகாப்பு முன்னேற்பாடு, ஆயத்த பணிகள் ஆகியன குறித்தும் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் 2ஆம் கட்டமாக பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் தமிழக உயர் போலிஸ் அதிகாரிகளுடன் சுற்றிப் பார்த்து ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், மாமல்லபுரம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபருக்கும் உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஒ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுக, ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.