சென்னை:

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ள நிகழ்வு தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப் பாளருமான  எடப்பாடியை நடிகர் சித்தார்த் கடுமையாக சாடியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக இருப்பதாக காட்டமாக டிவிட் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களுக்குக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் பெற்றுள்ள நிலையில், விரைவில் மாநிலங்களவையிலும் தாக்கல் செய்து ஒப்புதல் பெற மத்தியஅரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த மசோதாவுக்க காங்கிரஸ், திமுக உள்பட கம்யூனிஸ்டு கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், இந்த மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு தெரிவித்து உள்ளது.

அதிமுகவின் பாஜக ஆதரவான போக்கு தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில் நடிகர் சித்தார்த் காட்டமாக டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில்,  “எடப்பாடி பழனிசாமி என் மாநிலத்துக்கும் நம் மக்களுக்கும் பிரதிநிதியாக இருக்கி றார் என்பது மிகவும் வெட்கமாக இருக்கிறது. குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதவரளித்ததன் மூலம் அவருடைய சுயரூபமும், நேர்மையின்மையும், என்ன நடந்தாலும் பதவி முக்கியம் என்ற ஆசையும் வெளிப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் இதற்குப் பொறுப்பாக்கப் படுவீர்கள். அதுவரை உங்கள் பதவியை ரசித்து அனுபவியுங்கள். ஜெயலலிதா ஒருபோதும் குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்திருக்க மாட்டார். அவர் இல்லாமல் அதிமுக தனது நெறிமுறைகளிலிருந்து எவ்வாறு சீரழிந்துள்ளது! என்று கூறியுள்ளார்.