சென்னை: அதிமுக சார்பில், தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டசபை பொதுத்தேர்தல்களில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் வரும் 4-ந் தேதி முதல் நேர்காணல் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் களம் அனல்பறக்கத் தொடங்கி உள்ளது. கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்துள்ளது. மேலும், தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் விருப்ப மனுக்களும் வாங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகின்றன. திமுக சார்பில்,  இன்று (மார்ச் 2) முதல் நேர்காணல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியில் 6 மற்றும் 7ந்தேதி நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுக சார்பில் விருப்பமனு அளிக்கும் அவகாசம் 3ந்தேதியுடன் முடிவடைய  உள்ள நிலையில், நாளை மறுதினம்  (4ந்தேதி)  நேர்காணல்  நடக்கவிருக்கிறது.

இதுதொடர்பாக அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டசபை பொதுத்தேர்தல்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்தவர்களிடம் வரும் 4-ந் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் 2 கட்டங்களாக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடைபெறும். விருப்ப மனு பெற்றதற்காக அசல் ரசீதுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.