அதிமுகவை சேர்ந்த ஒருவரே 2021ம் ஆண்டு தேர்தலுக்கு, அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் அதிக குழப்பங்கள் நிலவி வருகின்றது.கட்சியில் உள்ள சில பிரமுகர்கள், அதிகாரப் போட்டியில் உள்ளனர். அதே சமயத்தில் பதவிக்கும் ஆசைப்பட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.பிரிந்து சென்று, தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து துணை முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இத்தகைய சூழலில் 2021ம் ஆண்டில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. அப்போது அதிமுகவை சேர்ந்த அடிமட்ட தொண்டர் ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார். அதிமுகவில் மட்டுமே தொண்டனும் முதல்வராக முடியும். மற்ற கட்சிகள் அனைத்தும், தந்தைக்கும், மகனுக்குமாக கட்சியையும், ஆட்சியையும் பகிர்ந்துக்கொள்வது போல அதிமுக இல்லை” என்று தெரிவித்தார்.