சென்னை:

மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு தோள் கொடுக்கும் அதிமுக, சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்பட அனைத்து சட்டம் மற்றும்  திட்டங்களுக்கு பகிரங்கமாக ஆதரவு அளித்து வருகிறது.

இதனால் கட்சியில் உள்ள சிறுபான்மையின மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், அது அதிமுகவின் வாங்கு வங்கியை பாதிக்கக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல், மற்றும் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிரொலிதிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், அதிமுக தலைமை இதை நிராகரித்துள்ள நிலையில், திமுக திட்டமிட்டு இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருவதாகவும்,  “நாங்கள் எப்போதும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்போம்” என்றும், அதில் தங்களது கட்சியின் நிலைப்பாடு தெளிவாக இருப்பதாகவும் கூறி வருகிறது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணைஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி,  குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு  அதிமுக வழங்கிவரும் ஆதரவு (CAA)   சிறுபான்மையினருக்கு எதிரான நிலைப்பாடு என்ற “வதந்திகளை” நம்ப வேண்டாம் என்றும், அதிமு கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.  திமுக, இந்த விஷயத்தில் தவறான பிரசாரம் சய்து வருவதாகவும், அதை கண்டித்த முதல்வர்,  சிறுபான்மையினரின் முன்னேற்றங்களுக்கு அதிமுக தொடர்ந்து “ஆதரவு” அளிக்கும் என்றும், அவர்களுக்காக  கடினமாக  உழைக்கும் என்றும் தெளிவு படுத்தினார். அமேலும், சி.ஏ.ஏ முஸ்லிம் மக்களுக்கு விரோதமானது என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால், இதன் தாக்கம் கடந்த வாரம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமா என்பது ஒரிரு நாளில் தெரிய வரும்.

அதிமுகவின் நிலைப்பாடு குறித்து கூறும் அரசியல் விமர்சகர்கள், நடைபெற்றுள்ள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், வரும் 2021ம் ஆண்டு நடை பெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்து உள்ளனர். இதற்கு காரணமாக, அதிமுக எம்.பி.யான அன்வர்ராஜா, அதிமுக தலைமைக்கு எதிராக கூறிய கருத்துக்களையும், பல இஸ்லாமியர்கள் அதிமுகவில் இருந்து விலகியிருப்பதும்,  அவர்கள் அதிமுக தலைமைக்கு முரணான மனநிலையில் உள்ளது தெரிய வருகிறது இது அதிமுகவுக்கு உள்ள சிறுபான்மையின மக்களின் வாங்கு வங்கியை குறைக்கும் என்று கூறி வருகின்றனர்.

சிஏஏ குறித்து கருத்து தெரிவித்துள்ள  அன்வர் ராஜா,  AIADMK CAA க்கு வாக்களித்திருக்கக்கூடாது. அதிமுக தனது நிலையை மாற்றாவிட்டால், கட்சி தனது சிறுபான்மை வாக்கு வங்கியை இழக்கும், ”என்று  பகிரங்கமாகவே கூறி உள்ளார்.

அதுபோல நெல்லை மாவட்டச்சேர்ந்த முன்னாள் முன்னாள் எம்.எல்.ஏவும், அதிமுகவின் முன்னாள் மாவட்ட சிறுபான்மையின ரின் பிரிவு செயலாளருமான நைனார்  முகமது, அதிமுக தலைமைக்கு எதிராக, கட்சியில் இருந்து விலகினார்.  தனது விலகளுக்கு காரணமாக,  “அதிமுக முஸ்லிம்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளவில்லை, மேலும் CAA க்கு ஆதரவாக வாக்களித்தது. எனவே, எனது கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

அதுபோல, வேலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பல இஸ்லாமியர்கள், தங்களது அடிப்படை உறுப்பினர் பதவிகளையும் துறந்து கட்சித் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளனர்.

அதே வேளையில் தமிழகம் முழுவதும் சிஏஏக்கு எதிரான இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டங்களுக்கு அதிமுக அரசு  அனுமதி வழங்கியும், பாதுகாப்பும் அளித்து வருகிறது…

தமிழகத்தில் சுமார் 15 சதவிகிதம் உள்ள சிறுபான்மையினர்களின் வாக்கு வங்கி, ஆட்சியை பிடிக்கும் அரசியல் கட்சிகளுக்கு முக்கியம். இதுபோன்ற சூழ்நிலையில், அதிமுகவுக்கு சிறுபான்மையின மக்களின் வாக்குகள் கிடைக்குமா என்பது கேள்வியாகவே உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

திமுக தற்போதைய அரசியல் நிகழ்வுகளை தனக்கு சாதகமாக்கி வருகிறது. சிஏஏக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, இஸ்லாமிய அமைப்புகளுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதனால், இஸ்லாமிய வாக்கு வங்கி தங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருக்கிறது.

ஆனால், பல சிறுபான்மையின அமைப்புகள் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் சமதூரத்தில் வைத்தே அரசியல் செய்து வருகின்றன.

இந்த சூழலில்தான் உள்ளாட்சி தேர்தல் மற்றும்  2021 ம் ஆண்டு நடைபெற உள்ள மாநில தேர்தல்களிலும் சிறுபான்மையின மக்களின் வாக்கு வங்கியே  வெற்றி பெறுவதற்கும் தோல்வி அடைவதற்கும் உள்ள வித்தியாசத்தை நிரூபிக்கும் என்று எதிர்பார்க்கப்பபடுகிறது.

ஆனால், அதிமுக தரப்போ, . “நாங்கள் எப்போதும் தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே இருக்கிறோம், அவர்களின் உரிமைகளை பாதுகாப்போம்”, அதில் எங்கள் கட்சியின்  நிலைப்பாடு   தெளிவாக உள்ளது என்று  கூறி வருகிறது.

மேலும், CAA எந்தவொரு இந்திய குடிமக்களையும் பாதிக்காது. சிறுபான்மையின மக்களின்மீது எங்களுக்கு அக்கறை இல்லை என்று எதிர்க்கட்சிகள் உருவாக்கிய தவறான எண்ணத்தை அகற்றி, 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்…

ஆனால், இந்த 2020ம் ஆண்டு நடைபெறும் நிகழ்வுகளே,  20201ம் ஆண்டு நடைபெற உள்ள  சட்டமன்ற தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் என்று நம்பப்படுகிறது.