சென்னை:

ள்ளிக்கரணையில் இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனர் வைக்கப்பட்ட விவகாரத் தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயக்கோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்கும் நோக்கில், நேற்று இரவு அவர் பிரபல மருத்துவமனை ஒன்றில் உடல்நலம் சரியில்லை என்று கூறி உள்நோயாளியாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்த சுபஸ்ரீ (வயது 23), என்பவர், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் வேலை முடிந்து சுபஸ்ரீ வீட்டிற்கு செல் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பல்லாவரம், துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை அருகே வந்த போது சாலை மையத்தில் வைக்கப்பட்டு இருந்த அதிமுகவினரின் திருமண வரவேற்பு பேனர் சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் நிலை தடுமாறிய சுபஸ்ரீ இருசக்கர வாகனத்துடன் சாலையில் விழுந்தார். அப்போது கோவிலம் பாக்கத்தில் இருந்து வந்த தண்ணீர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி சில அடி தூரத்திற்கு இழுத்து சென்றது. லாரியின் முன் சக்கரம் சுபஸ்ரீ மீது ஏறி இறங்கியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்தும் அங்கு வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சடலத்தை கைப்பற்றி குரேம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அதில் அந்த பேனர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் என்பவரின்  இல்ல திருமணத்தின் வரவேற்பிற்காக வைக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று சென்னை உயர்நீதி மன்றம் அளித்த உத்தரவைத் தொடர்ந்து, அந்த பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயக்கோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் மற்றும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஜெயக்கோபாலிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை காவல்துறையினர் சம்பந்தப்பட்ட முன்னாள் கவுன்சிலரிடம் விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காவல்துறையினரின் கைதில் இருந்து தப்பிக்கும் நோக்கில் ஜெயக்கோபால், நேற்று இரவே உடல்நலம் சரியில்லை என்று கூறி, பிரபல மருத்துவமனை ஒன்றில் உள்நோயாளி யாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

பேனர் வைத்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தமிழகஅரசு, தொலை பேசி எண்களை வெளியிட்டுள்ள நிலையில்,  இளம்பெண் சாவுக்கு காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலரை கைது செய்ய தமிழக காவல்துறை தயக்கம் காட்டி வருகிறது. மேலும், சென்னை உயர்நீதி மன்றம் விடுத்த எச்சரிக்கையும் காற்றில் பறந்துள்ளது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.