ஸ்டாலினுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்திப்பு: ஏர்க்கலப்பை பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு

சென்னை: ராகுல் காந்தியின் தமிழக வருகையின்போது, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி உள்ளிட்டோர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்தனர். சந்திப்புக்கு பிறகு தினேஷ் குண்டுராவ் மற்றும் கே. எஸ். அழகிரி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது தினேஷ் குண்டுராவ் பேசியதாவது: ராகுல் காந்தியின் தமிழக வருகையின்போது, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஏர்க்கலப்பை பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டணி கட்சித் தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டது.

இதுதான் இந்த சந்திப்பின் நோக்கம். தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட வில்லை. ராகுல் காந்தியின் வருகை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. கூட்டத்துக்குப் பிறகு கூடுதல் விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றார். குண்டுராவை தொடர்ந்து பேசிய கே. எஸ். அழகிரியும் இதே கருத்தை தமிழில் விளக்கி கூறினார்.