புதுடெல்லி: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊழியர்களுக்கான ஊதியத்தை நிறுத்தக்கூடாது மற்றும் மாணாக்கர்களிடம் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற உத்தரவுகளை பொறியியல் கல்லூரிகள் & தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு பிறப்பித்துள்ளது ஏஐசிடிஇ அமைப்பு.

மேற்குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த பல கல்லூரிகள் மீது, மாணாக்கர்களிடம் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்தல், ஊழியர்களுக்கான ஊதியத்தை நிறுத்தி வைத்தல், பல ஊழியர்களை பணிநீக்கம் செய்தல் உள்ளிட்ட பல புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், ஏஐசிடிஇ தரப்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்; ஊரடங்கு உத்தரவு நீங்கி, இயல்பு நிலை திரும்பும் வரை, மாணாக்கர் சேர்க்கை கட்டணம் உட்பட, கல்விக் கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என்று அனைத்து பொறியியல் கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வி மையங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன், ஊரடங்கு காலத்தில், கல்லுாரி ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட நிலுவைகள் வழங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ஊழியர்களுக்கு ஊதியம் தராமல் நிறுத்தி வைத்தல் கூடாது. மேலும், ஊரடங்கு காலத்தில், ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள கல்லுாரி நிர்வாகங்கள், மீண்டும் அவர்களை பணியில் சேர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வாயிலாக தற்போதைய செமஸ்டர் வகுப்புகள் தொடரும். விரைவில், திருத்தப்பட்ட கல்வி ஆண்டு அறிவிக்கப்படும். தேர்வுகள், மதிப்பெண் வழங்குவது, மாணவர் தேர்வு உள்ளிட்டவை குறித்த வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே நடப்புக் கல்வி ஆண்டிலும், பிரதமரின் சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.