இபிஎஃப் நிதிக்கான வட்டி விகிதம் குறைப்பா? – ஏஐடியுசி அவசரக் கடிதம்!

புதுடெல்லி: தொழிலாளர்களின் இபிஎஃப் நிதிக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் வகையிலான ஒரு மோசடி முயற்சி தொடர்பாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோண் கங்வார் தலையிட வேண்டுமென ஏஐடியுசி எனப்படும் அகில இந்திய டிரேட் யூனியன் காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

அதாவது, இந்த ஏப்ரல் – ஜுன் இடையிலான காலக்கட்டங்களில், அதிகளவிலான இபிஎஃப் நிதி, சம்பந்தப்பட்டவர்களால் எடுக்கப்படுகிறது என்பதைக் காரணம் காட்டி, இந்த மோசடி பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“வருமான வாய்ப்புகள் குறைவதால், வட்டி விகிதங்களை குறைப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் நாங்கள் விரிவாக ஆராய விரும்புகிறோம். எனவே, அந்த மோசடி பிரச்சாரம் நிறுத்தப்பட வேண்டும்.

கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில், அந்த நிதியிலிருந்து ரூ.20,000 கோடி எடுக்கப்பட்டது. இந்தாண்டு, அதே காலக்கட்டத்தில் ரூ.22000 கோடி எடுக்கப்பட்டுள்ளது. வருவாய் அதிகரிப்பதால், ஆண்டுக்காண்டு எடுப்புத் தொகை கூடுவது இயல்பே. எனவே, இந்தாண்டில் ரூ.30000 கோடி எடுக்கப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல்” என்று கூறப்பட்டுள்ளது.