எய்ட்ஸ் ரத்தம்: சென்னை பெண் புகார் குறித்து தெரியாது! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை:

 கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனக்கு எச்ஐவி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டதாக சென்னை மாங்காட்டை சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறி உள்ளார்.

இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், இதுகுறித்து தனக்கு தெரியாது என்றும், நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது என்று கூறினார்.

கடந்த சில நாட்களாக சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட ரத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இன்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தனக்கும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டதாக மாங்காட்டை சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இது மேலும் பரபரப்பை கூட்டியுள்ள நிலையில்,  இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், இந்த புகார் குறித்து  நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிய வருகிறது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், சென்னை பெண் புகார் குறித்து ஆய்வு செய்துவிட்டு பின்னர் பதிலளிக்கிறேன் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர்,  உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் கின்னஸ் சாதனை புரிந்துள்ளது என்றார்.  மேலும் மதுரை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட அரசு மருத்துவ மனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

முன்னதாக காதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் 4வது முறையாக உடல் உறுப்பு தானத்தில் விருது வாங்கியதையடுத்து, முதல்வர் பழனிசாமியிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வாழ்த்து பெற்றனர்.