கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் ரத்தம்: சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

சென்னை:

ர்ப்பிணிக்கு ஹெச்ஐவி (எய்ட்ஸ் நோய் பாதிப்பு) ரத்தம் செலுத்தப்பட்டது  குறித்து சென்னை உயர்நீதி மன்றம்  தாமாக முன்வந்து விசாரிணை நடத்துவதாக அறிவித்து உள்ளது. இதுகுறித்து  விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைபெற்று வந்த நிலையில், ரத்தத்தில் சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் ரத்தம் ஏற்றும் படி மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்த போது அவருக்கு எய்ட்ஸ் நோய் உருவாக்கும் எச்ஐவி  தொற்று  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து  தகவலறிந்த அரசு மருத்துவர்கள் அவரை அழைத்து ரத்தப் பரிசோதனை செய்த போது அவருக்கு எச்ஐவி  இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் இதுகுறித்து ஆய்வு நடத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கிடையில் எச்ஐவி ரத்தம் தொடர்பாக  அரசு மருத்துவர்கள், ரத்த வங்கி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரிடம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன்  தொடர் விசாரணை நடத்தினார்.  இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 அரசு ரத்த வங்கிகள் மற்றும் 4 தனியார் ரத்த வங்கிகளில் உள்ள ரத்தத்தை மறு பரிசோதனை செய்ய விருதுநகர் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

எய்ட்ஸ் பாதித்த ரத்தம் செலுத்தப்பபட்ட விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட  ர்ப்பிணி பெண் கணவருடன் சென்று சாத்தூர் டவுன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதற்கிடையில், ரத்தம் தானம் செய்த நபர், தற்கொலை முடிவை நாடி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த நிகழ்வு காரணமாக, சென்னை உயர்நீதி மன்றம் சுமோட்டோ (தானாக முன் வந்து விசாரணை) வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து, இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.