டில்லி

ந்திய கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திச் சோதிக்க  டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்புதல் அளித்துள்ளது.

உலகெங்கும் பரவி வரும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் பல நாடுகளும் இறங்கி உள்ளன.   அவ்வகையில் இந்தியாவில் 7 நிறுவனங்கள் இப்பணியில் இறங்கி உள்ளன.  இவற்றில் ஐதராபாத்தைச் சேர்ந்த பரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவுடன் இணைந்து தங்கள் தடுப்பூசியை சோதனை செய்து வருகிறது.

இந்த நிறுவனத்துக்கு மனிதர்கள் மீதான முதல் இரண்டு கட்ட பரிசோதனைகளுக்கு முதல் அனுமதி கிடைத்தது.  இந்த  சோதனையை நடத்த நாடெங்கும் உள்ள 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டன.   இதில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் ஒன்றாகும்.  இங்கு மனித சோதனை நடத்த மருத்துவமனைக் குழு  ஒப்புதல் அளித்துள்ளது.

இதையொட்டி 12 மருத்துவமனைகளிலும் மொத்தம் 375 பேர் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.  இவ்வாறு சோதனை செய்யப்படுவோரில் சிலருக்கு உண்மையான தடுப்பு மருந்தும் வேறு சிலருக்குத் தடுப்பு மருந்து என்னும் பெயரில் உடலில் எவ்வித விளைவும் உண்டாக்காத சத்து மருந்தும் அளிக்கப்பட உள்ளன

இதில் யாருக்கு உண்மையான மற்றும் யாருக்குச் சாதாரண மருந்து என்பது மருந்தைப் பெறுபவர் மற்றும் செலுத்துவோருக்கு அறிவிக்கப்பட மாட்டாது.

இந்த மனித சோதனையின் முதல் கட்டத்தில் எதிர்மறை விளைவுகள் ஏற்படுமா என்பது சோதிக்கப்பட உள்ளது.   இரண்டாம் கட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து அந்த வைரசுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பது பரிசோதிக்கப்பட உள்ளது.