குஜராத்தில் சூறாவளியாக பரவும் கொரோனா… ஏய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்பிய அமித்ஷா..

அகமதாபாத்:

பாஜக ஆட்சி செய்து வரும் குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கி விடுவது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை தலைவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நாட்டின் 42 சதவிகித தொற்று பரவல் தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா மாநிலம், குஜராத் ஆகிய மாநிலங்களிலேயே இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

குஜராத்தில் இதுவரை 7,402 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 449 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே கொரோனாபரவலில் 2வது இடத்தில் குஜராத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 390 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், அமித்ஷா உத்தரவின்படி,  அகமதாபாத்திற்கு சென்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், அங்குள்ள எஸ்விபி மருத்துவமனை மருத்துவர்களுடன் கலந்துரையாடினர். அப்போது, கொரோனா சிகிச்சை குறித்து குஜராத் மருத்துவர்களுக்கு சில அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும்  வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து, எய்ம்ஸ் இயக்குநர், குஜராத்தின் முதன்மைச் செயலாளரை சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார். அவர் குஜராத்தின் முதலவர் விஜய் ருபானியையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.