எய்ம்ஸ் குறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் : மத்தியஅரசு

மதுரை,

மிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த வழக்கில் மத்திய அரசு பதில் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து முடிவெடுத்து அறிவிக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்குத்தான் உள்ளது என்று கூறி உள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைய உத்தேசிக்கப்பட்டு உள்ளது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும், மதுரை ஐகோர்ட்டு கிளையில் ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இதில், மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கிளை மதுரை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.

நீதிபதிகள், ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வு, மத்திய சுகாதாரத் துறை செயலர், தமிழக தலைமை செயலர், சுகாதாரத் துறை செயலருக்கு,’நோட்டீஸ்’ அனுப்பி, ஜூலை, 12க்கு வழக்கை ஒத்தி வைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் மத்திய சுகாதார துறை செயலர் தாக்கல் செய்த பதில் மனு இன்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய வேண்டும் என்பதை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே தமிழக அரசு 5 இடங்களை பரிந்துரை செய்தது என்றும் கூறி உள்ளது.

மேலும், 200 ஏக்கர் நிலம், போக்குவரத்து வசதி இருந்தால், அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தயாராக இருப்பதாக மத்திய அரசி அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்தது. முதலில், மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அதை வேறு இடத்துக்கு மாற்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதைத்தொடர்ந்து தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கலாம் என மாநில அரசு பரிந்துரைத்தது.

ஆனால், தஞ்சையில் போதிய வசதி இல்லை என்று மத்திய அரசு மறுத்துவிட்டது. வேறு இடங்களை பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொண்டது.

அதைத்தொடர்ந்து தஞ்சாவூர் செங்கிப்பட்டி, ஈரோடு, செங்கல்பட்டு, மதுரை, புதுக்கோட்டை,ஆகிய 5 இடங்கள் பரிந்துரைக்கப்பட்டது.

இதற்கிடையில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில்தான் அமைய வேண்டும் என்றும், தஞ்சையில்தான் அமைய வேண்டும் என்று போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.