மதுரையில் எய்ம்ஸ்: அமைச்சர்கள் குழு ஆய்வு

மதுரை:

துரை அருகே தோப்பூரில்  எய்ம்ஸ் மருத்துவமனை  அமைய உள்ள இடத்தில் அமைச்சர் கள்,அதிகாரிகள் குழுவினர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மதுரை அருகே உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு தமிழக சுகாதாரத்துறைக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து  மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்   மற்றும் சுகாதாரத் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள்  பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த ஆய்வறிக்கை இன்றே முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்படும் என  தெரிவித்தனர்.

மருத்துவமனை தொடங்குவதற்கான  பணிகளை வேகமாகவும், விரைவாகவும்  முடுக்கிவிடும் நோக்கில்  ஆய்வு நடத்த வந்ததாகவும், எவ்வித தாமதமும் இன்றி பணிகள்உடனே  தொடங்கப் படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

அதுபோல, மதுரையில்  எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க,  மத்திய அரசு விதித்துள்ள  5 நிபந்தனை களும் நிறைவேற்றப்படும் என்றும், மருத்துவமனை அமைக்க தேவையான  198.27 ஏக்கர் நிலம் மொத்தமாக கையகப்படுத்தி தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த மருத்துவமனைக்கு தேவையான தண்ணீர்,  மேலூர் குடிநீர்த் திட்டத்தில் இருந்து 5 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவாதம் அளித்திருப்பதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இருவழித் தடங்களில் 20 மெகாவாட் மின்சாரம் அளிப்பதற்கு தேவையான பணிகள் தொடங்க  இருப்பதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

மத்திய அரசு விதித்த நிபந்தனைகளை விரைவில் நிறைவேற்றி, எவ்வித தாமதமும் இல்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஆக்கப்பூர்வமான பணிகள் தொடங்கப்படும் என்றும், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை இரண்டு ஆண்டுகளில் செயல்படத் தொடங்கும் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மேலும், அமைய உள்ள புதிய மருத்துவமனையில்,  50 சிறப்பு மருத்துவப் பிரிவுகளுடன், 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இருக்கும் என்றும்,  100 மருத்துவப் படிப்பு, 60 செவிலியர் படிப்புக்கான கல்லூரிகளும் இதனுடன் தொடங்கப்படும் என்றும்,  100 சிறப்பு மருத்துவர்கள் மருத்துவமனையில் பணியாற்றுவார்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

டில்லியில் உள்ள  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்படும் என்றும்,  இது தமிழக மக்களுக்கு கிடைத்த மணி மகுடம் என்றும் கூறினார்.

கார்ட்டூன் கேலரி