சென்னை:

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த எய்ம்ஸ், அப்பல்லோ அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்று வந்த காலத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் 5 முறை அப்பல்லோவுக்கு வந்த சிகிச்சைகளை கேட்டறிந்து ஆலோசனை வழங்கினர்.

சிங்கப்பூர், லண்டன் மருத்துவர்களும் தொடர் சிகிச்சை அளித்தனர். எனினும் டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இவரது மரணத்தில் மர்ம இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்வரான பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர், பல அரசியல் கட்சி தலைவர்களும் மர்மம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை வேண்டும் என்று புகார் மனு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி ஓ.பி.எஸ் அணியினர் வரும் 8ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்ப்டட சிகிச்சை குறித்து தமிழக அரசு இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவ குழுவினர், அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கையை டெல்லியில் மாநில சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார். இதற்கு ஏற்ப எய்ம்ஸ் மருத்துவமனையிடம் இருந்து தமிழக அரசு கேட்டு பெற்றுள்ளது.