மது குடிக்க பரிந்துரைத்தால் லைசென்சை ரத்து செய்வோம்… இந்திய மருத்துவக் கழகம் மிரட்டல்

டெல்லி:

கேரளாவில் மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், மருத்துவர்கள் பரிந்துரைகள், அவர்களுக்கு மது வழங்கலாம் என கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்திய மருத்துவக் கழகம் மதுவை பரிந்துரைக்கும் மருத்துவர்களின் லைசென்ஸ் ரத்து செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மருந்து கடைகள் மற்றும் அத்தியாவசிய கடைகள் தவிர மதுக்கடைகள் உள்பட  அனைத்துக் கடைகளையும் மூட மாநில அரசுகள் உத்தரவிட்டு உள்ளன.

இதற்கிடையில்,  கேரளாவில் மது குடிக்காமல் அவதியுறுபவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மது வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், குடிகாரர்களுக்கு மதுவை  பரிந்துரை செய்தால், அந்த மருத்துவரின்  மருத்துவ உரிமம் ரத்து செய்யப்படும் என்று இந்திய மருத்துவக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதில், மது குடிக்காததால் அவதிப்படுபவர்களுக்கு அறிவியல்பூர்வமாக தான் மருத்துவ சிகிச்சை தரவேண்டும்.மருத்துவமனையில் வைத்தோ அல்லது வீட்டில் வைத்தோ அப்படிப்பட்ட சிகிச்சையை தரலாம்.

மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மது கொடுக்கலாம் என்பது அறிவியல் பூர்வமாக ஏற்புடையது அல்ல என்பதால் மருத்துவர்கள் பரிந்துரை செய்யக்கூடாது.  அப்படி யாராவது பரிந்துரை செய்தால் அவர்களின் மருத்துவ தொழில் சான்றிதழ் ரத்து செய்யப்படும்.

இது குறித்து இந்திய மருத்துவக் கழகத்தின் கேரள பிரிவுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.