கர்நாடகாவில் இஸ்லாமிய கட்சி தலைவர் காவி தலைப்பாகை அணிந்து பிரச்சாரம்

பெங்களூரு:

அகில இந்திய மஜ்லிஸ் இ ல்தேஹாதுல் முஸ்லிம் கட்சி தலைவராக இருப்பவர் அசாவுதீன் ஓவசி. ஐதராபாத் எம்.பி.யான இவர் பாஜக.வுக்கு எதிரான தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதோடு தெலங்கானா முதல்வர் சந்திரசேகராவுடன் இணைந்து பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இவர் கர்நாடகா தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பெல்காமில் நடந்த பிரச்சாரத்தில் இவர் தலையில் காவி நிற தலைப்பாகை அணிந்து பேசியது அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சாரத்தில் இவர் காங்கிரஸ் கட்சியையும் விமர்சனம் செய்து பேசினார். பாஜக, காங்கிரஸ் அல்லாத ஆட்சி கர்நாடகாவில் அமைய வேண்டும் என்று வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார். முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இது கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.