அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு: இந்திய இஸ்லாமிய தனிச்சட்ட வாரியம் முடிவு

அயோத்தி நில வழக்கில் 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக அனைத்து இந்திய இஸ்லாமிய தனிச்சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த 9ம் தேதி வழங்கியது. அத்தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்லப்போவது இல்லை என ஏற்கனவே சன்னி வஃக்பு வாரியம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் லக்னோவில் இன்று அனைத்து இந்திய இஸ்லாமிய தனிச்சட்ட வாரியத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும், விரைவில் சீராய்வு மனு தயார் செய்யப்படும் என்றும் இந்திய இஸ்லாமிய தனிச்சட்ட வாரியம் அறிவித்துள்ளது.