டில்லி

ரு நாள் மருத்துவராக வாழ்ந்து பார்த்தால்தான் எங்கள் துயரம்  உங்களுக்கு தெரியும் என் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

ராஜஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள் தங்களுக்கு பணி உயர்வு,  மற்றும் ஊதிய உயர்வு வழங்காததற்கு போராடி வருகின்றனர்.   இது குறித்து வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அனைத்து ராஜஸ்தான் மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்தது.    அதை தொடர்ந்து இந்த மாதம் டிசம்பர் 16ஆம் தேதி வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.

ஆனால் ராஜஸ்தான் அரசு வேலை நிறுத்த அறிவிப்பு வெளியான உடனேயே 86 மருத்துவர் சங்க நிர்வாகிகளைக் கைது செய்ததால் போராட்டம் பிசுபிசுத்துப் போனது.  இது குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் தலைமையில் உள்ள அகில இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளனர்.

அந்தக் கடிதத்தில், “உங்களைப் போல ஒரு செயல்படும் பிரதமர் கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.    ஒரு நாள் நீங்களும் வெள்ளைக் கோட்டு அணிந்து எங்களைப் போல் அரசு மருத்துவராக செயல்பட வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.  அப்போது எங்களுக்குள்ள வேலப்பளு,  எங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்,  சரியான சிகிச்சை அளிக்க முடியாமல் நோயாளிகளிடம் நாங்கள் படும் அவஸ்தை,  சரியான மருந்துகளும் உபகரணங்களும் இல்லாததால்  ஏற்படும் சங்கடங்கள் போன்றவைகளை உங்களால் புரிந்துக் கொள்ள முடியும்.

ராஜஸ்தான் அரசு, அம்மாநில மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தத்தை, சங்கத்தின் 86 முக்கிய நிர்வாகிகளை கைது செய்து முறியடித்துள்ளது.    தவிர,  ராஜஸ்தான் மாநில அரசால் அவர்களது கோரிக்கை முதலில் ஏற்றுக் கொள்ளப் பட்டு பின்பு நிராகரிக்கப் பட்டுள்ளது.   இதனால் கடின உழைப்பை மேற்கொள்ளும் எங்களைப் போன்ற மருத்துவர்கள் அரசிடம் நம்பிக்கை அற்று போய் விடுகிறார்கள்.   தயவு செய்து ராஜஸ்தான் அரசிடம் அவர்கள் முன்பு ஒப்புக் கொண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றச் சொல்லுங்கள்.   மேலும் மருத்துவர்கள் மிது நிகழ்த்தும் கொடுரமான நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தச் சொல்லுங்கள்”  எனக் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.