ஐப்பசி மாத பூஜை நிறைவு: சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை இன்று முற்பகலுடன் மூடல்

சென்னை:

ரபரப்பான சூழலில் ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட கோவிலின் நடை இன்று முற்பகல் பூஜையுடன் நடை அடைக்கப் படுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, சில பெண்கள் கோவிலுக்குள் செல்ல தீர்மானித்தனர். ஆனால், உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக மாநிலம் முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

இந்த பரபரப்பான சூழ் நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ம் தேதி சபரிமலை கோவிலின் நடை திறக்கப்பட்டது. அப்போது,  உச்சநீதி மன்ற தீர்ப்பை மேற்கோள்  காட்டி சில பெண்கள் சபரிமலை வர முயற்சி செய்தனர். அவர்கள்   பக்தர்களால் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதன் காரணமாக  போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த பரபரப்பான சூழலில் கடந்த  19-ம் தேதி ரஹானா பாத்திமா, கவிதா ஆகிய இரு பெண்கள் சபரிமலை சன்னிதானம் வரை காவல்துறை பாதுகாப்புடன் முன்னேறி வந்தனர். ஆனால், சன்னிதானத்திற்குள் இருந்த அய்யப்ப பக்தர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக பெரும் பரபரப்பு நிலவியது.

அதைத்தொடர்ந்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதன் காரணமகா பரபரப்பாக நடைபெற்று வந்த அய்யப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜை இன்று காலை பூஜையுடன் நிறைவுபெற்று நடை அடைக்கப்படுகிறது.

மீண்டும் அடுத்த மாதம் கார்த்திகை மாத  மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படும்.